09

திருதராட்டிரன் பாண்டு திருமணம் - முதல் பாகம் 10-12

ஒருவழியா வியாசனின் "தவஒளி"யோட "மகிமை"யால அம்பிகாவுக்கு திருதராட்டிரன் பிறக்கிறான். அம்பாலிகாவுக்கு பாண்டு பிறக்கிறான். வேலைக்காரிக்கு விதுரன் பிறக்கிறான். மூணு பயலுகளும் வளர்ந்து வாலிபமாகி கல்யாண வயசு வந்தவுடனே, பொண்ணு பாக்க ஆரம்பிக்குறாங்க. (அஸ்தினாபுரத்துக்கு வாரிசு இல்லன்னு தான இந்த வியாசன் வந்து "தவஒளி"ய இறக்குனான். ஆனா இன்னும் மன்னன் இல்லாம தான் ஓடுது நிர்வாகம்)
மூத்தவன் திருதராட்டிரனுக்கு காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை பொண்ணு கேப்போம்னு நினைச்சு பீஷ்மனை அனுப்புறா சத்யவதி. படையைக் கூட்டிட்டு காந்தார நாட்டுக்குப் போறான் பீஷ்மன். இதுக்கிடையில "அஸ்தினாபுரத்து பீஷ்மன் படையெடுத்து வரான்"னு நாலுபேரு கிளப்பிவிட, காந்தார மன்னன் சுபலன் இதென்னடா வம்பா போச்சுன்னு ஒரு தூதனை பீஷ்மன்ட்ட அனுப்புறான்.
"படையெடுத்தெல்லாம் வரலப்பா. திருதராட்டிரனுக்கு காந்தாரிய பொண்ணு கேட்டு வந்திருக்கேன்னு போய்ச் சொல்லு"ன்னு தூதன்ட்ட சொல்லி அனுப்புறான் பீஷ்மன்.
இந்த விசயம் தெரிஞ்சவுடனே காந்தார நாட்டு அரண்மனைல பூகம்பம் வெடிக்குது. காந்தாரியோட தம்பி தான் சகுனி. அக்கா மேல பாசம் அதிகம். திருதராட்டிரனுக்கு பொண்ணு கேட்டு பீஷ்மன் வரான்னு கேள்விப்பட்ட உடனே படு டென்சனான சகுனி நேரா அவன் அப்பன் சுபலன்ட்ட போயி சண்டை போடுறான். "யப்பா, போயும் போயும் கண்ணு தெரியாத திருதராட்டிரனுக்கா அக்கா காந்தாரிய குடுக்கப் போற?. நா ஒத்துக்க மாட்டேன்"னு சண்டை பிடிக்கிறான்.
"தம்பி, பிராக்டிகலா யோசிச்சுப் பாரு. இந்த பீஷ்மன் இருக்கானே, அவன் பண்ற காரியத்த பாரு. பொண்ணு கேக்க வர்றவன் தாம்பூலத் தட்டோட வராம, எதோ போருக்கு படையெடுத்து வர்றமாதிரி வந்திருக்கான். இதுக்கென்ன அர்த்தம்? பொண்ணு குடுக்கிறியா இல்ல தூக்கிட்டுப் போகவான்னு சொல்லாம சொல்றான். ஏற்கனவே காசி நாட்டுல இருந்து அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளைத் தூக்கிட்டு வந்திருக்கான். இப்ப அவங்க பிள்ளைகளுக்கும் பொண்ணு கேட்டு வரான். எல்லாத்துக்கும் மேல தான் நெனைச்ச நேரத்துல சாகுற வரம் வாங்குனவன். இவனை பகைச்சிக்கிட்டா நாம நாட்டையே இழந்திருவோம். அதனால பேசாம காந்தாரிய குடுப்போம். திருதராட்டிரன் நாளைக்கி மன்னனானா நம்ம காந்தாரி தான அஸ்தினாபுரத்து அரசி? போக நம்மளவிட சொத்து பத்து நெறைய வச்சிருக்காய்ங்க"ன்னு சுபலன் மகன் சகுனிய சமாதானப்படுத்துறான்.
ஆனாலும் சகுனிக்கு டென்சன் அடங்கல. நேரா அக்கா காந்தாரிட்டயே போயி பேசுறான். "விடுறா தம்பி, அப்பா சொல்றது தான் சரி. அவர் சொல்றபடியே கேப்போம். நீ கவலைப்படாத"ன்னு சொல்றா காந்தாரி.
சுபலனும் உடனே போயி பீஷ்மனுக்கு வரவேற்பு குடுத்து, ஒருவழியா சம்பந்தம் பேசி முடிக்கிறாங்க. அஸ்தினாபுரம் அரண்மனையில திருதராட்டிரன் - காந்தாரி மேரேஜ் நடக்குது. எல்லாரும் வந்து  வாழ்த்தினாலும் சகுனி மட்டும் நிம்மதியில்லாம திரியுறான்.

"அக்கா, உனக்கா இந்த நிலைமை? கண்ணு தெரியாதவனுக்கு வாழ்க்கப்பட்டு கஷ்டப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?"ன்னு புலம்பிட்டே இருக்கான்.
"தம்பி, ஆனது ஆகிப்போச்சி. இனி திருதராட்டிரன் உன்ர மாமன். மனசுல வச்சிக்கோ. இப்ப கண்ணுல கருப்புத்துணி கட்டிக்கப் போறேன். இனி நாங்க ரெண்டு பேருமே பார்வை இல்லாதவங்க தான்"னு சொன்ன அக்கா காந்தாரி கண்ல கருப்புத் துணிய கட்டிக்கிட்டா. இதப்பாத்த சகுனி இன்னும் டென்சனாகி கோபத்தைப் பூராவும் பீஷ்மன் மேல சேர்த்து வைச்சிட்டு ஒரு முடிவெடுக்குறான்.
"அக்கா, இனி நான் காந்தார நாட்டுக்குப் போகவிரும்பல. உன்ன இப்பிடி விட்டுட்டு நான் போகமாட்டேன். உன்னோடயே அஸ்தினாபுரம் அரண்மனைல தங்கிக்கறேன்"னு பெர்மிசன் கேக்குறான் சகுனி. அக்கா காந்தாரி கணவன் திருதராட்டிரன்ட்ட கேக்க, அவனும் "அட, நம்ம மாப்பிள்ளைக்கி இல்லாத இடமா? இருந்துட்டுப் போகட்டும்"னு சொல்றான்.
**********
ஒருவழியா திருதராட்டிரன் கல்யாணம் முடிஞ்சது. அடுத்ததா இந்தப் பாண்டுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசிச்ச சத்யவதி, குந்திதேவிய பத்தி கேள்விப்பட்டு, அவளையே பேசி பாண்டுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவெடுக்குறா.
                                 
சிற்றரசன் குந்திபோஜனுக்கு பெண் குழந்தை இல்லைன்னு மனக்கவலைல இருந்தான். அதனால அவனோட பிரெண்ட் ஒருத்தனோட பொண்ணு பிரீத்தியை தத்தெடுத்து வளர்க்குறான். இந்த பிரீத்திமா தான் குந்திதேவி.
********
ஒரு பிளாஷ்பேக். ஒரு நாள் குந்திபோஜனை சந்திச்ச துர்வாச முனிவர், "உன் ஊர்ல ஒரு யாகம் பண்ணப் போறேன். உதவிக்கு உன் பொண்ணை அனுப்பிவை"ன்னு கேக்குறான். துர்வாச முனிவன் ஒரு கோவக்கார முனிவன்னு கேள்விப்பட்டிருக்கான். மாட்டேன்னா சொல்லமுடியும்? சரின்னு குந்திய ஹெல்ப்க்கு அனுப்பி வைக்கிறான் குந்திபோஜன்.
யாகத்தை முடிச்ச துர்வாசன் குந்திய கூப்பிட்டு "நல்லா ஹெல்ப் பண்ணம்மா,  நா உனக்கொரு மந்திரம் சொல்லித் தரேன். எந்த சாமிய நினைச்சி அந்த மந்திரத்த சொல்றியோ, அந்த சாமி வந்து உனக்குப் பிள்ளை வரம் குடுக்கும். நா வரேன்"னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான். (பொண்ணுன்னா உடனே குழந்தை வரம் தானா? ஒரே குஷ்டமப்பா..)
ரஜினி பாபா படத்துல மந்திரம் உச்சரிக்கிற மாதிரி, குந்தி ஒருநாள் சூரியனைப் பாத்துட்டே அந்த மந்திரத்த சொல்லி டெஸ்ட் பண்ணிருக்கா. உடனே சூரியன் நேரா வந்துட்டான். வந்தவன் சும்மா வரல. "குந்தி, இந்தா உனக்கொரு குழந்தை. இவம்பேரு கர்ணன். மார்புல கவசமும், காதுல குண்டலமும் இருக்கான்னு செக் பண்ணிக்கோ. இது ரெண்டும் இருக்கும்வரை இவனை யாராலயும் ஜெயிக்கமுடியாது. அம்புட்டுதேங்"ன்னு சொல்லி குழந்தையக் குடுத்துட்டுப் போயிட்டான் சூரியன். (இப்ப எதுக்கு கவசமும் குண்டலமும்? குழந்தை வளரும்போது கவசமும் சேர்ந்து வளரப் போகுதா?)
குந்திக்கு ஒண்ணும் புரியல. விளையாட்டுக்கு மந்திரத்தை சொல்லிப் பாத்தது குத்தமாடா? உடனே வந்து குழந்தையக் குடுத்துட்டுப் போயிட்டான். எப்படான்னு காத்துக்கிட்டு இருப்பாய்ங்களோன்னு புலம்பித் தவிக்கிறா.
நேரா அவ பிரெண்ட் தத்ரி கிட்ட குழந்தைய தூக்கிட்டுப் போறா. "கல்யாணம் ஆகாதவ குழந்தையோட இருந்தா இந்த உலகம் என்ன பேசும்? அதனால பேசாம இந்தக் குழந்தைய கூடைல வச்சி ஆத்துல விட்ருவோம். சூரிய பகவான் குழந்தைய பாத்துக்குவார்"னு ஐடியா குடுக்குறா தத்ரி.
வேற வழி இல்ல. உடனே கூடைல வச்சி கங்கை ஆத்துல விட்டுட்டு வந்துடுறாங்க. அதேநேரம் ஆத்துக்கு அக்கறையில குளிச்சிட்டிருந்த திருதராட்டிரனோட தேரோட்டி அதிரதன் "சூரிய பகவானே, கல்யாணம் பண்ணி இத்தனை நாள் ஆகியும் எனக்குக் குழந்தையே இல்ல. எனக்கொரு குழந்தை குடு"ன்னு வேண்டிட்டு கண்ணைத் தொறந்த நேரம் கர்ணன் கூடையில வாரான். எப்பிடி ரெண்டும் மேட்ச் ஆகுதா? அதிரதன் கர்ணனைத் தூக்கிட்டுப்போயி வளர்க்குறான்.  இதுதான் பிளாஷ்பேக்கு.
*********
இப்ப குந்திய பாண்டுவுக்கு பொண்ணு கேட்டு பீஷ்மன் வரான். பீஷ்மன் வந்த விசயத்த குந்திகிட்ட சொல்லி சம்மதம் கேக்குறான் அவங்கப்பன் குந்திபோஜன். "உங்க விருப்பம்ப்பா"ன்னு குந்தி சொல்லித் தொலைச்சதால திருமண ஏற்பாடு நடக்குது.
குந்திபோஜ நாட்டு இளவரசி குந்தி, மாத்ர நாட்டு இளவரசி மாத்ரி ரெண்டுபேரையும் ஒரே ஸ்டேஜ்ல மேரேஜ் பண்றான் பாண்டு.
************
பின்குறிப்பு:
- கங்கை ஆத்துக்குப் பிறந்த பீஷ்மன்
- பராசரனோட "தவஒளி"க்குப் பிறந்த வியாசன்
- வியாசனோட "தவஒளி"க்குப் பிறந்த திருதராட்டிரன் பிரதர்ஸ்
- தத்தெடுக்கப்பட்ட குந்தி
- சூரியன் குடுத்த குழந்தை கர்ணன் இப்பிடித்தான் மகாபாரதத்துல இருக்கு.
மூணு பொண்ணுங்களுக்குப் பிள்ளைவரம் குடுத்த வியாசன் தான் இந்த அக்கப்போரை எல்லாம் கதையா எழுதித் தொலைச்சிருக்கான். அதையும் அவன் சொல்லச்சொல்ல எழுதுனது விநாயகராம். இது சாம்பிள் தான். இன்னும் இருக்கு நிறைய்ய...

Write a comment ...

Sankar Srinivasan

Show your support

Support me to contribute more.

Write a comment ...

Sankar Srinivasan

Certified Market Professional of National Stock Exchange of India