10

கிந்தமமுனி சாபம் - முதல் பாகம் 13 - 15

எப்பிடியோ திருதராட்டிரனுக்கு காந்தாரியையும், பாண்டுவுக்கு குந்தி & மாத்ரி ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வச்சாச்சு. அப்ப அந்த விதுரன் என்ன ஆனான்? அவன் வேலைக்காரி மகன் தான. டீல்ல வுடு மாமுன்னு அவனை பெருசா யாரும் கண்டுக்கல.
விசித்ரவீரியன் போய்ச் சேர்ந்ததுல இருந்து அஸ்தினாபுரத்துக்கு மன்னன் யாரும் இல்ல. வழக்கம்போல பீஷ்மன் தான் மேனேஜ்மென்ட்.
பேரப்பிள்ளைங்க வளர்ந்து ஆளாகி கல்யாணமும் பண்ணிட்டதால அவங்கள பதவி ஏற்கச் சொல்லலாமான்னு சத்யவதி பீஷ்மன்ட்ட கேக்குறா. பீஷ்மனும் சரின்னு சொல்லிட்டு பஞ்சாயத்த கூட்ட ஏற்பாடு பண்றான்.
மறுநாள் பஞ்சாயத்து கூடுது. மூணு பயலுகளும் ஒரே நாள்ல பிறந்தாலும், முந்திப் பிறந்தது திருதராட்டிரன் தான். அதனால அவனுக்கே முடி சூட்டுவோம்னு பஞ்சாயத்த கெளப்புறான் பீஷ்மன்.
அதக்கேட்டு திருதராட்டிரனுக்கு ஏக குஜால். சகுனிக்கு அதவிட. ஏன்னா அவன் அக்கா மகாராணி ஆகப்போறாளே? பாண்டுவும் கை தட்டுறான். நம்மாளுங்க தான் உடனே சாய்ஞ்சுருவாங்களே. பாண்டுவ பாத்து எல்லாரும் கை தட்டுறாங்க.
அப்ப விதுரன் எந்திரிச்சு நின்னு பீஷ்மன்ட்ட "பெரியப்பு, அண்ணன் திருதராட்டிரன் மேல எனக்கு உள்ள பாசம் வேற. ஆனா அதுக்காக மனசுல பட்டத சொல்லாம இருக்கமுடியுமா? நீரு எனக்கு சொல்லிக் கொடுத்த "ராஜ நீதி" என்ன சொல்லுதுன்னா, உடல் ஊனமுற்றவங்களுக்கு நாடாளுற தகுதி இல்லன்னு சொல்லுது. ஆனா இங்க நீரு கண்ணு தெரியாத அண்ணனுக்கு பட்டம் சூட்டணும்னு சொல்றீரே. இது ஞாயமா? சாந்தனு தாத்தாவோட அண்ணன் தேவாபி தாத்தாவுக்கு தோல் நோய் இருந்ததால அவரு மன்னனாக முடியாமப் போனது உங்களுக்குத் தெரியாதா?" அப்பிடின்னு கேக்குறான்.
இதக்கேட்ட சகுனிக்கும், திருதராட்டிரனுக்கும் விதுரன் மேல செம காண்டு. "அடே விதுரா, வேலைக்காரி மவனே, என் பொழப்ப கெடுக்குறதுக்காகவே வந்தியா"ன்னு சவுண்டு விடுறான் திருதராட்டிரன்.
"இல்லண்ணே, ஞாயத்த சொன்னேன். பாண்டு தான் மன்னனாகணும்.  அதுக்கு மேல பெரியவங்க விருப்பம் என்னவோ அதுபடி நடக்கட்டும்"னு விதுரன் சொன்னவுடனே பீஷ்மனுக்கும் அவன் சொன்னது பிடிச்சிப்போச்சி.
"விதுரன் சின்னப்பயலா இருந்தாலும் சரியாப் பேசுறான். பார்வை இல்லாத திருதராட்டிரனுக்குப் பதிலா பாண்டு மன்னனாகட்டும். என்னப்பா நாஞ்சொல்றது?"ன்னு கூட்டத்தப் பாத்துக்கேக்க, கூட்டத்துக்கு எப்போ தனிக்கருத்து இருந்துச்சி? வழக்கம்போல ஆமான்னு மண்டைய ஆட்டுறானுங்க.
டென்சனாகிப் போன சகுனியும், திருதராட்டிரனும் எந்திரிச்சி வெளிநடப்பு பண்ண, பாண்டுவுக்கு குருட்சேத்திர மன்னனா முடிசூட்டுறான் பீஷ்மன்.
விதுரம் பய கடைசி நேரத்துல காரியத்த கெடுத்துட்டானேன்னு சகுனியும், திருதராட்டிரனும் புலம்பிட்டே வாரானுங்க.
"மாமு, சிம்மாசனம் உங்களுக்குத் தான். கொஞ்சம் பொறுமையா இருங்க"ன்னு திருதராட்டிரனுக்கு ஆறுதல் சொன்ன சகுனி ஒரு பிளான் பண்றான்.
********
இந்தப் பாண்டுவ எதாச்சும் போர்ல இறக்கிவிட்டு, எதிரி கையால மண்டையப் போட்டான்னா அடுத்து நம்ம மாமு திருதராட்டிரன் மன்னனாகுறத யாராலயும் தடுக்கமுடியாது. திரும்பவும் அந்த விதுரம்பய வந்து எதாச்சும் சாஸ்திரம், சம்பிரதாயம்னு பீலா விட்டான்னா அவனுக்கும் ஒரு பாயாசத்த போட்டுற வேண்டியது தான்னு நினைச்சிட்டே நேரா பாண்டுவ போய்ப் பாக்குறான்.
"சின்னமாமு, நீரு மன்னரானதெல்லாம் சரிதான். ஆனா ஏற்கனவே பீஷ்மன் குடுத்த நாட்டை ஆள்றதெல்லாம் ஒரு பெருமையா? நீரு அண்டைநாட்டு இளிச்சவாயன்கள் மேல படையெடுத்துப் போயி அவனுங்க நாட்டையும் நம்ம குருட்சேத்திர நாட்டோட சேர்த்தாத்தான அது உமக்குப் பெருமை?"ன்னு மணியாட்டிட்டு வந்துட்டான்.
அதுவும் சரிதான்னு உடனே படைய ரெடிபண்ணி அக்கம்பக்க நாடுகளை எல்லாம் சண்டை போட்டு தோக்கடிச்சி குருட்சேத்திர நாட்டு எல்லைய விரிவாக்குறான் பாண்டு.
பாண்டு புகழ் பரவுது. இந்தப் பாண்டு சண்டையில சாவான்னு பாத்தா, கடேசில உலகப்புகழ் விஞ்ஞானியாகிட்டானே? இப்ப என்ன பண்றதுன்னு யோசிக்கிறான் சகுனி.
**********                             
அண்ணன் திருதராட்டிரனை மன்னனாக விடாம தான் மன்னனானதால, அண்ணன் தன்மேல இன்னும் காண்டுல இருக்குறது பாண்டுவுக்கு ரொம்ப வருத்தமாவே இருக்கு. மனசே சரியில்ல,  கொஞ்ச நாள் காட்டுல போயி வேட்டையாடிட்டு வருவோம்னு கிளம்புறான் பாண்டு.
சிங்கம் புலிய வேட்டையாட அவன் என்ன கேணையனா? ஜோடியா மேட்டர் பண்ணிட்டிருந்த மான்கள் மேல அம்படிக்கிறான். மான் அம்படி பட்டு விழும்ன்னு பாத்தா, ஒரு முனிவன் கீழ விழுறான்.
"அடே லூசுப்பயலே, நான் முனிவன்டா. எம்பேரு கிந்தமன். எம்பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு மானா மாறி ரெண்டு பேரும் ஜல்சா பண்ணிட்டிருந்தோம். அம்படிச்சிட்டியே"ன்னு முனிவன் சொல்றான்.
"ஏய்யா, முற்றும் துறந்த முனிவனுக்கு எதுக்கு பொண்டாட்டி? அதும்போக பொண்டாட்டி ஆசப்பட்டா பன்னு வாங்கிக்குடு, இல்ல பபுள்கம் வாங்கிக்குடு. அத விட்டுட்டு நீ மானா மாறுனது எனக்கெப்பிடிய்யா தெரியும். மன்னிச்சுக்கய்யா, தெரியாம அடிச்சிட்டேன்"னு பாண்டு சொல்ல,  முனிவன் எதையும் கேக்கத் தயாரில்ல.
"உன்னை மன்னிக்கமாட்டேன். நீ எப்ப உம் பொண்டாட்டிகள் கூட ஜல்சா பண்றியோ அப்ப நீ நெஞ்சு வெடிச்சு சாவடா. இது என்ர சாபம்டா"ன்னு சொன்ன கிந்தம முனிவன் ஸ்பாட்லயே அவுட்டு.

ஒரு முனிவன் இப்பிடி எல்லாமா சாபம் குடுப்பான். ஏன்யா, இது ஒரு பெரிய மனுசன் செய்யிற காரியமா. ஒண்ணுக்கு ரெண்டா கட்டி வச்சிருக்கேன். இனி நான் எப்பிடிடா பொழப்பு தளப்ப பாக்குறதுன்னு வருத்தமா யோசிச்சிட்டே திரும்புறான் பாண்டு.
பாண்டு படுடென்சனா அரண்மனைக்குத்  திரும்புனா அங்க எல்லாரும் ரொம்ப சந்தோசமா திரியுறானுங்க. காரணம் திருதராட்டிரனோட மனைவி காந்தாரி கர்ப்பம்னு வைத்தியர் சொல்லிட்டாராம்.
நானே சாபம் வாங்கிட்டு வந்திருக்கேன். இவிங்களுக்கு சந்தோசத்த பாருன்னு யோசிச்சிட்டே நேரா பாட்டி சத்யவதிய பாத்து தன்னோட சாபக்கதைய சொல்லி அழுறான் பாண்டு.
அதுக்குள்ள விசயம் வெளில தெரிஞ்சு சகுனியும், திருதராட்டிரனும் சொல்லி சொல்லி சிரிக்கிறானுங்க. "மாமு, எதோ கவலைப்பட்டீரே. இப்ப நிலைமைய பாத்தீரா? இங்க அக்கா கர்ப்பமாகி நம்ம வம்சம் தழைக்கப்போற நேரத்துல, அந்தப்பய பாண்டு சாபம் வாங்கிட்டு வந்திருக்கான். இனி அவனுக்கு வாரிசில்லை. குருட்சேத்திர நாடே நமக்குதான். கடவுள் இருக்கான் மாமு"ன்னு ஆறுதல் சொல்றான் சகுனி.
ராத்திரி பூராவும் நம்மகூட தான படுத்திருந்தானுங்க? அதுக்குள்ள விசயம் எப்பிடிடா வெளில போச்சுன்னு யோசிச்ச பாண்டு வெறுத்துப்போய் ஒரு முடிவுக்கு வந்து நேரா பாட்டி சத்யவதிய பாக்குறான்.
"பாட்டி, சாபத்தோட நான் அரியாசனத்துல இருக்க விரும்பல. நா உடனே என் ரெண்டு பொண்டாட்டிகளையும் கூட்டிட்டு காட்டுக்குப் போயி தவம்பண்ணி என் சாபத்துக்கு பரிகாரம் தேடிட்டு வர்றேன். அதுவரைக்கும் அண்ணன் திருதராட்டிரன் நாடாளட்டும்"னு சொல்லிட்டு, பதவிய ராஜினாமா பண்ணிட்டு, மனைவிகளைக் கூட்டிட்டு காட்டுக்குப் போயி தவம்பண்ண ஆரம்பிக்குறான் பாண்டு.
"அப்பாடா, போயிட்டான்டா"ன்னு நிம்மதிப் பெருமூச்சு விடுறான் சகுனி. திருதராட்டிரன்  குருட்சேத்திர நாட்டோட மன்னனாகுறான்.

Write a comment ...

Sankar Srinivasan

Show your support

Support me to contribute more.

Write a comment ...

Sankar Srinivasan

Certified Market Professional of National Stock Exchange of India