ஆன்மீகம் என்ற பெயரால் எதை எழுதினாலும், அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றாக வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. புராணங்களும், இதிகாசங்களும் உண்மையானவை என்றும் அதை அப்படியே ஏற்கவேண்டும் என்றும் சர்க்கஸ் விலங்குகளைப் போல் நம்மைப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த மூடத்தனத்தின் விளைவு, உண்மையில் புராணங்கள் என்ன சொல்கின்றன என்பதை இறை மறுப்பாளர்கள் எடுத்துரைத்தால் “இந்து விரோதி” என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
பார்ப்பன மூடத்தனங்கள் எப்போது தமிழகத்தில் நுழைந்ததோ, அப்போதிருந்தே தமிழர்களின் நம்பிக்கை திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது.
விளைவாக, தமிழர்களின் முருகன் வழிபாடு என்பது பிற்பாடு சிவனின் மகன் முருகன் என்றும், வடநாட்டு விநாயகன் முருகனின் அண்ணன் என்றும் உருவேற்றினார்கள். 60 சமஸ்கிருத ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளானது. இப்படியாக திட்டமிட்டு தமிழர் கலாசாரம் இன்றளவும் தாக்குதலுக்குள்ளாகிறது.
மானிடர் ஆன்மா மரணமெய்தாது என்று உருவேற்றிவிட்டு, மறுபுறம் மகாளய அமாவாசையில் இறந்தோருக்கு சடங்குகள் செய்யவைத்து பணம் பிடுங்கும் பார்ப்பனக் கூட்டம்.
உங்களது கடவுள் நம்பிக்கை வேறு. அதை நான் மதிக்கிறேன். ஆனால் நம்பிக்கையின் பேரால் ஏமாறாதீர்கள். எதையும் கேள்வி கேளுங்கள்.
நான் இத்தொடரில் மகாபாரதத்தைப் படித்து கேள்வி எழுப்புகிறேன். என் நடை சற்று நகைச்சுவையாகவும், எள்ளலும் கலந்தே இருக்கும். ஏனென்றால் அது புதுமைப்பித்தன் எனக்கு ஈந்தது. அதோடு, ஆன்மீகம் மீது எனக்கு பயம் இல்லை. கடவுள் என் கண்ணைக் குத்தினால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
என் கேள்விகளுக்கு நீங்களும் பதில் தரலாம். உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஆனால் பொய்களை வலிந்து திணிக்க வேண்டாம். நன்றி
அன்புடன்
சங்கர் சீனிவாசன்
1 அக்டோபர் 2022
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென, ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ்சோதி”
- வள்ளலார்
எல்லாம் வல்ல இயற்கைப் பேராற்றல் நம் எல்லோரையும் வழிநடத்தட்டும்
மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஆலயம் சென்று உள்ளே என்ன நடக்கிறது என்றறிய நீண்ட நாள் ஆவல். சமீபத்தில் தான் வாய்ப்புக் கிடைத்தது. போய்த்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன்.
உள்ளே நுழைந்தவுடன் காவி உடையணிந்த இளம் மொட்டை+குடுமி ஒன்று என் கையில் தொன்னையில் சர்க்கரைப் பொங்கலை வைத்தது. (சோத்துக்கு வந்திருப்பேன்னு நினைச்சிட்டான் போல)
தேடிவந்த பொங்கலை விட மனமில்லை என்பதால் பொங்கலை முடித்து உள்ளே நுழைந்தேன். ரிசப்சனில் பல இளம் காவி மொட்டை+குடுமிகள் ரிசப்ஷனிஸ்டுகள் போல் அமர்ந்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பிரபுபாதா சிரித்துக் கொண்டிருந்தார்.
(இந்த மொட்டைகளைக் கண்டதும் எனக்கு நித்தியானந்தாவும், குறிப்பாக அந்த சிஷ்யைகளும் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை)
ஆன்மீக வேட்டைப் பிரியர்கள் பலர் வேகவேகமாக உள்ளே உள்ள தியான மண்டபத்திற்கு விரைந்தார்கள். (கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்காதோ? ஏன் அரக்கப் பரக்க ஓடணும்?)
அதிகபட்ச இளம் காவி மொட்டை+குடுமிகள் உள்ளூர்க் காரர்கள் இல்லை. ஒருவருக்கொருவர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்கள்.
ஒரு மொட்டையை நிறுத்தி வாயைக் கிண்டினேன்… மொட்டை எதுவும் பேசாமல் மற்றொரு மொட்டையிடம் கையைக் காட்டிவிட்டு நகர்ந்தது. அந்த மற்றொரு மொட்டை “வாங்க சார்… 150 ரூவாக்கு பகவத்கீதை விக்கிறோம்… வாங்குனீங்கன்னா 6 புத்தகங்களை இலவசமாக் குடுப்போம்” என்று தன்பங்குக்கு ஸ்ரீகிருஷ்ணனை Offerல் விற்க முயன்றது. விதி வலியது. 150 ரூபாயும் கைமாறியது.
150 ரூபாய் குடுத்ததும், தடிமனான ஒரு பகவத்கீதையையும், சில இலவசப் பிரசுரங்களையும் மொட்டையிடமிருந்து பெற்றேன்.
“போர்க்களத்தில் உறவினர்களோடு சண்டையிடணுமா என்று தயங்கிநின்ற அர்ச்சுனனைத் தேற்றி உபதேசம் செய்த கிருஷ்ணன், இம்மாம்பெரிய புத்தகம் போடுற அளவுக்கு பேசியிருக்கான்னா அதுக்கு எத்தனை நாள் ஆகியிருக்கும்? அவன் சொல்லச் சொல்ல யாரு எழுதுனது? யப்பா… போதும்ப்பா… சீக்கிரம் முடி… அப்பிடின்னு அர்ச்சுனன் சொல்லாமலா இருந்திருப்பான்” என்றெல்லாம் மனதில் எழுந்த கேள்விகளைக் கேட்டு மொட்டையை தர்மசங்கடப்படுத்த விரும்பாமல் நகன்றேன்.
வெளியே சில மொட்டை+குடுமிகள் பையில் நிறைய பகவத்கீதைகளை வைத்து நின்றார்கள். இவர்கள் தினமும் நகருக்குள் சென்று, சிக்கியவர்களிடம் கீதையை 150 ரூபாய்க்கு தலையில் கட்டுவது இவர்களது பணி.
“இலவச குர்ஆன் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று போர்டு வைத்து அமர்ந்திருக்கும் மீசை மைனஸ்+தாடி பிளஸ் குல்லாக்களை மதுரை நகருக்குள் அவ்வப்போது காணலாம்.
இவர்கள் இருதரப்புக்கும் tough fight குடுக்கும் “இலவச பரிசுத்த வேதாகம” போட்டியாளர்களையும் அடிக்கடி காணலாம். ஆனால் “இலவச கீதை” மட்டும் இல்லை.
Referenceக்கு அவ்வப்போது கீதையைத் தொட்டிருந்தாலும், முறைப்படி வாசிப்போம் என்று முதல் பக்கத்தைப் புரட்டினால், அந்த முதல் பக்கமே சொல்கிறது “மகாபாரதத்தை படித்துவிட்டு பிறகு வா” என்று. அந்த மகாபாரதத்தையும் தான் பார்ப்போமே…
மகாபாரதத்தை ஒரு பறவைப் பார்வை பார்த்து என் கருத்துகளைப் பகிர்கிறேன். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் தன் தந்தத்தை ஒடித்து ஓலைச்சுவடியில் மகாபாரதம் எழுதினாராம்.
இந்தத் தொடரில் இதற்கு முந்தைய அத்தியாயத்தையும் படித்து, இதையும் படித்து மனதைத் தேற்றி பின் அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கவும்.
எங்காவது உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு வியாசரும், விநாயகருமே காரணம். நானல்ல…
ஸ்ரீகிருஷ்ணன் அருள்மாரி பொழியட்டும்.
பின்குறிப்பு: அந்த சர்க்கரைப் பொங்கலுக்குப் பின் ஒரு நுண்ணரசியல் உள்ளது. 7ம் நூற்றாண்டுக்குப் பின்னான பக்தி இயக்கம், தமிழர் கலாச்சாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. சமணமும், பௌத்தமும் அழிக்கப்பட்டது. வைதீக பார்ப்பனியமும், சமஸ்கிருதமும் உள்நுழைந்தது. சம்பந்தமே இல்லாத விநாயகரும் தமிழர்களுக்கு அறிமுகமாகிறார். கிராமங்கள் தோறும் கதாகாலட்சேபம் நடத்திய பார்ப்பனர்களுக்கு, தான் சொல்லும் பொய்களை நம்பவைக்க புராணங்கள் தேவைப்பட்டது. புராணங்களை நம்ப முட்டாள்களும் தேவைப்பட்டார்கள். அந்த முட்டாள்களை அடிமையாக்கவே பொங்கலும் புளியோதரையும் தேவைப்பட்டது. இதன் மறுவடிவே பிரிட்டிஷார் இந்தியாவில் அறிமுகப்படுத்திய தேனீர். பொங்கல் பார்ப்பனர்களையும், தேனீர் பிரிட்டிஷாரையும் வாழவைத்தது.
தொடரும்னு போட்டு கட் பண்ணு
Write a comment ...