சாந்தனு கிட்ட இருந்து கதைய ஆரம்பிக்கிறோம். சரியா?
பாரதத்தின் மன்னன் (அதாவது குருட்சேத்திர நாட்டின் மன்னன்) குருவின் மகன் பிரதீபன். பிரதீபனுக்கு ரெண்டு பசங்க. மூத்தவன் தேவாபி, இளையவன் சாந்தனு.
மூத்தவன் தோல் நோய் வந்து சொரிஞ்சிகிட்டே இருந்ததால, ஆட்சியுரிமை அவனுக்கு இல்லைன்னு சொல்லி இளையவன் சாந்தனுவ மன்னனாக்கிட்டாய்ங்க. மூத்தவன் தேவாபி போங்கடான்னு வெறுத்து காட்டுக்குப் போய் தவம் பண்ணுறான். (ஏன்டா இதுக்கெல்லாமா ஆட்சியுரிமை இல்லன்னு சொல்லுவீங்க?)
ஆட்சியை சாந்தனுவுக்கு வழங்கிய அப்பன் பிரதீபனும் இன்னொருபக்கம் காட்டுக்குப் போய் தவம் பண்ணுறான். ஆஊன்னா ஆளாளுக்கு தவம் பண்ண, இன்னொரு பக்கம் சாந்தனு மன்னனோ “போர் போர்”னு ஒரே அக்கப்போர்.
போர்லயே காலம் கழியுது. திருமண வயசு தாண்டி நடுத்தர வயசு ஆகுது சாந்தனுவுக்கு. “நமக்குப் பிறகு யார் இந்த நாட்டை ஆள்றது?”னு கவலைப்பட ஆரம்பிச்சு, வழக்கம்போல கண்ணாலம் பண்ண முடிவெடுக்குறான்.
காலம் போன காலத்துல எவன் பொண்ணு குடுப்பான்? சரி… யார கல்யாணம் பண்ணலாம்னு அப்பன் கிட்ட கேக்கலாம்னு காட்டுக்குப் போறான்.
***********
காட்டுல அவங்கப்பன் பிரதீபன் தவம் பண்றப்போ, கங்கை நதி பெண் உருவெடுத்து அவன் கிட்ட வர்றா… (நதி எப்பிடிய்யா பெண் உருவெடுக்கும்? தம்பி… பொங்கல் வேணுமா, வேணாமா… வேணும்னா அப்பிடி ஓரமாப்போய் ஒக்காரு…)
“யாரும்மா நீயி”ன்னு பிரதீபன் கேட்க, நாந்தேன் கங்கைன்னு அந்தம்மா சொல்ல, யாரு… சிவன் தலையில இருக்குற கங்கம்மாவான்னு இவங்கேக்க, ஆமான்னு அவ சொல்ல, சரி இங்க எதுக்கு வந்தன்னு இவன் திருப்பிக்கேக்க, நான் உங்க மகனை கல்யாணம் பண்ண விரும்புறேன்னு கால் பெருவிரலால மண்ணுல சுத்தி சுத்தி கங்கம்மா சொல்ல, பிரதீபனுக்கு ஒண்ணும் புரியல.
சரி சரி பாப்போம்னு சொல்லி அனுப்பிவிடுறான். (சிவன் தலையில ஒருபக்கம் இருந்துக்கிட்டு, இன்னொரு பக்கம் சாந்தனுவ கல்யாணம் பண்ணா சிவன் கோச்சுக்க மாட்டாரா…?)
கொஞ்ச நேரத்துல சாந்தனு வந்து சேர்றான். “வாங்க மகனே”ன்னு மகனை வரவேற்குறான் பிரதீபன். “டே தகப்பா.. இது ஒனக்கு நியாயமாடா? எனக்கு ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வக்கிறத விட்டுட்டு, காட்டுக்குள்ள வந்து தவம் பண்றியே”ன்னு அழுறான் சாந்தனு.
“என்னங்க மகனே இப்பிடி சொல்லிட்டீங்க.. உங்களுக்கு பொண்ணு ரெடி. ஏற்கனவே பாத்து வச்சிட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவங்களே வந்துருவாங்க”ன்னு சொல்லி முடிக்க கரெக்டா கங்கம்மாவும் வந்து சேர்றா…
அண்ணலும் நோக்க, அவளும் நோக்க.. அப்புறமென்ன கண்ணாலந்தான். இந்த எடத்துல ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறா கங்கம்மா…
“என்னைய திருமணம் செய்யணும்னா ஒரு நிபந்தனை…. கல்யாணத்துப் பிறகு நான் என்ன செஞ்சாலும் என்னை கேள்வி கேக்கப்படாது. மீறி கேட்டா அடுத்த நொடியே டைவர்ஸ் பண்ணிருவேன்” அப்பிடின்னு கங்கம்மா கண்டிசன் வைக்கிறா…
கங்கம்மாவ பாத்ததுல இருந்து ஏற்கனவே புல் பார்ம்ல இருந்த சாந்தனு, தண்ணி தெளிச்சு விட்ட ஆடு மாதிரி மண்டைய ஆட்டிட்டான்…
“கிறுக்குப் பயபுள்ள.. இவ பெருசா என்ன செஞ்சிறப் போறவ…?” அப்பிடின்னு நெனச்சிட்டே சரின்னு மண்டைய ஆட்ட, கல்யாணம் நடக்குது.
பொங்கல் ரெடி…
Write a comment ...