கல்யாண மூட்ல இருந்த சாந்தனுவுக்கு, கங்கம்மா தான் சாட்சாத் அந்த புண்ணிய நதி கங்கா தேவி அப்பிடிங்குற பேக்ரவுண்ட் தெரியாது. அவன் அப்பனும் அதைச் சொல்லல…
கல்யாணத்தை முடிச்சிட்டு சட்டுபுட்டுன்னு ஆகறத பாப்போம்னு முடிவுபண்ணி, களத்துல இறங்குறான் சாந்தனு. ஐயிரண்டு திங்களில் அழகா ஒரு குழந்தை பிறக்குது. “அகண்ட” இந்த பாரதத்தை ஆள வாரிசு வந்தாச்சுன்னு சாந்தனு ரொம்ப சந்தோஷப்படுறான். ஆனா சந்தோஷம் ரொம்பநாள் நீடிக்கல…. புதுசா பிறந்த குழந்தைய தூக்கிட்டுப்போன கங்கம்மா, அத கங்கை ஆத்துல தூக்கி எறிஞ்சிட்டு வர்றா…
“அடிப்பாவி…. பெத்த தாயா நீ… பெத்த பேயி…”ன்னு மனசுல திட்டுற சாந்தனு, நேரடியா திட்ட முடியல… வாரிசுக்குத் தான கல்யாணம் பண்ணோம், இப்ப அந்த வாரிசையே ஆத்துல போட்டு வந்துட்டாளே….ன்னு புலம்புன சாந்தனு அதை நேரடியா அவகிட்ட அதைக் கேக்கமுடியல… கேட்டா டைவர்ஸ் ஆயிருமே?
“நான் என்ன செஞ்சாலும் ஏன்னு கேக்கப்படாது… மீறிக்கேட்டா உடனடி டைவர்ஸ்”ன்னு வரம் வாங்கிட்டாளே…? என்ன பண்றது?
கொஞ்சநாள் கழிச்சு இரண்டாவது குழந்தை பிறக்குது. அதையும் கொண்டுபோயி ஆத்துல தூக்கிப் போட்டா… இப்பிடியே ஏழு குழந்தைகள் பிறந்து ஏழையும் ஆத்துல தூக்கிப் போட்டா… சாந்தனு செம காண்டுல வெயிட் பண்றான்.
எட்டாவது குழந்தை பிறக்குது. கதையில டர்னிங் பாயிண்ட்டும் நெருங்குது. எட்டாவதை எடுத்துட்டு கங்கம்மா ஆத்துக்குப் போறப்போ நிப்பாட்டுறான் சாந்தனு.
“யம்மா கங்கம்மா… என்னைய என்ன கேணையன்னு நெனச்சியா… ஏழு குழந்தைகள ஆத்துல தூக்கிப் போட்டுட்ட… என்ன ஆனாலும் சரி, இந்தக் குழந்தைய மட்டும் ஆத்துல போட விடமாட்டேன்”னு சொல்றான்.
அதுக்கு கங்கம்மா “மன்னா… குடுத்த வரத்தை மீறிவிட்டீர். இனி நாம் சேர்ந்து வாழமுடியாது. இப்பவே டைவர்ஸ் பண்ணிட்டு கிளம்புறேன். அதேநேரம் உண்மையையும் சொல்லிட்டுப் போறேன். நான் தான் புண்ணிய நதி கங்காதேவி. உன்னைய கல்யாணம் பண்ணச்சொல்லி தேவர்கள் தான் அனுப்பி வச்சாங்க”ன்னு சொல்றா…
“தேவர்களா… அவிங்களுக்கு வேற வேலையே கிடையாதா? உன்னைய ஏம்மா அனுப்பிவச்சாங்க”ன்னு சாந்தனு கேக்க உண்மைய சொல்றா கங்கம்மா….
**********
“முன்னொரு காலத்தில் (ஆமாங்க… முன்னாடி ஒரு காலத்துல…) பிரம்மன் இந்திரனுக்காக 8 அல்லக்கைகளைப் படைக்கிறான். மேலோகத்துல இந்திரனுக்கு எடுபிடியா வேலை பாக்குற இந்த 8 பயலுகளும், ஒருதடவை வசிஷ்டரோட மேலோக ஆசிரமம் வழியா போறானுங்க. போறவிங்க சும்மா போகாம, அங்க நந்தினி பசு இருக்குறதை பாக்குறாங்க. இந்தப் பசு எது கேட்டாலும் குடுக்குமாம் (எவன் எதைக் கேட்டு வாங்குனானோ?)
வசிஷ்டர் முற்றும் துறந்த முனிவர். அந்த முனிவருக்கு எதுக்கு இந்த நந்தினி பசு? பேசாம நாம கொண்டு போயிருவோம்னு கெளப்பிட்டுப் போயிட்டானுங்க. வசிஷ்டர் வர்றாரு. நந்தினிய காணாம ஞானக்கண்(?) கொண்டு பாத்து உண்மைய தெரிஞ்சிகிட்டாரு. கடுப்பான வசி “அந்த 8 அல்லக்கைகளும் பூலோகத்துல பொறந்து நாசமாப் போங்கடே”ன்னு சபிச்சுட்டாரு.
“பெருசு.. என்னய்யா ஆஊன்னா சாபம் விடுறீர்? சரி போகட்டும், சாப விமோசனம்னு ஒண்ணு தருவீரே… அதச் சொல்லும்”னு அல்லக்கைகளோட தலைவன் வசி கிட்ட கேக்குறான்.
அதுக்கு வசி “அடே அல்லக்கை தலைவனே.. நான் சொல்றத நல்லா கேட்டுக்க. உங்க எட்டு பேர்ல, ஏழுபேர் பூலோகத்துல பொறந்த உடனே சாபம் நீங்கும். ஏன்னா அவிங்க உனக்கு உடந்தையா இருந்தவனுங்க… நந்தினி பசுவைத் திருடுன A1 மெயின் அக்யூஸ்டே நீதான். நீ பூலோகத்துல ரொம்ப நாள் வாழ்ந்தாலும் அதர்மத்துக்கு பக்கத்துலயே இருந்து லோல்பட்டு லொங்காத்தான் போகப்போற… உன் சாவு ஒரு திருநங்கையால இருக்கும். கெளம்புங்கடா”ன்னு அனுப்பிட்டார்.” அப்பிடின்னு கங்கம்மா பிளாஷ்பேக் சொல்றா…
*********
ஏழு அல்லக்கைகளும் கங்கம்மா வயித்துல பிறந்தவுடனே சாபம் நீங்குச்சு… ஆத்துல எறிஞ்சுட்டா… (அதான் சாபம் நீங்கிருச்சுல்ல, அப்புறம் ஏன் ஆத்துல போடணும்?)
கையில இருக்குற எட்டாவது குழந்தைதான் A1 மெயின் அக்யூஸ்ட். அதாவது நந்தினிய ஆட்டயப் போட்ட பார்ட்டி.
“நம்ம மேரேஜ் டீல் முடிஞ்சது. இந்தக் குழந்தைய நான் எடுத்துட்டுப் போயி வளர்த்துக் கொண்டுவர்றேன். அதுவரைக்கும் உன் திசைக்கே ஒரு கும்புடு”ன்னு சொல்லிட்டு கங்கம்மா கிளம்பிட்டா.
ஒரு பசுமாட்ட ஆட்டயப் போட்டதுக்குத் தான் இத்தன அக்கப்போரும்…
அந்த A1 மெயின் அக்யூஸ்ட் தான் பின்னாடி பீஷ்மனா வாறாப்டி….
பொங்கல் ரெடி…
Write a comment ...