நிச்சயமாக “பொன்னியின் செல்வன்” கல்கி அவர்களின் சிறந்த படைப்பு.- சிவகாமியின் சபதம்- பார்த்திபன் கனவு- பொன்னியின் செல்வன்என்ற ஆர்டரில் படித்தால் சோழர் கால வரலாறு, பல்லவர்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவற்றை உத்தேசமாக அறியலாம். அதற்கு வழி ஏற்படுத்தித் தந்தது கல்கி எனலாம்.
வரலாற்றுக் காவியத்தில் கற்பனைகள் கலந்தால் தான் இலக்கியச் சுவை கூடும்.ஆனாலும், கல்கியின் படைப்புகளில் உண்மைகள் பல இடங்களில் மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் நிறைய இடம்பெறுகின்றன என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.
சேந்தன் அமுதன் என்ற ஒரு எளிய வீட்டு அப்பாவி தான் உண்மையான மதுராந்தகன் என்பதும், அவனே உத்தம சோழனாக பதவியேற்கிறான் என்பதும், அதுவரை அவன் குடிசையிலேயே வாழ்ந்தான் என்பதும் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட வேண்டியவை.
இது இப்படியென்றால், அதுவரை மதுராந்தகன் என்ற பெயரில் சோழர் அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தவன் உண்மையில் அமரபுஜங்கன் என்னும் பாண்டிய நாட்டு இளவரசன் என்பதும், அவன் அவ்வளவு நாட்களாக, தான் இழந்த பாண்டிய நாட்டு அரியணையை மீட்க சோழ இளவரசனாக வேடமிட்டு நடித்தான் என்பதும் ஏற்கும்படி இல்லையே? அப்படி நடித்து என்ன சாதித்துவிட முடியும்? இதுவும் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட வேண்டியதே.
இதைக்கூட அறியாமலா இருந்தார்கள் சோழ அரச குடும்பத்தினர்? இதை உறுதி செய்யாமல் எப்படி பழுவேட்டரையர் தன் பெண்ணை மதுராந்தகனுக்கு மணமுடித்து வைக்கிறார்?அருள்மொழி வர்மன் தான் ராஜராஜ சோழன். சரி, அவன் தாய் யார்? குடிசை வீட்டு வாய் பேசாத பெண்ணா? இல்லை செம்பியன் மாதேவியோ, வானவன் மாதேவியோ இல்லை எதோ ஒரு அரச குடும்பத்து மகாராணியா?
வீரபாண்டியனுடனான போரில், அவனது காதலி நந்தினி வற்புறுத்தியும் கேளாமல், அவள் கண்முன் வீரபாண்டியனின் தலையை வெட்டி எறிந்து போரில் வெற்றி பெறுகிறான் ஆதித்த கரிகாலன், அதாவது அருள்மொழியின் அண்ணன், அதாவது பட்டத்து இளவரசன்.
உடனே ஆதித்த கரிகாலனைப் பழிவாங்க பாண்டிய நாட்டு நந்தினி சோழ நாடு புகுந்து, தாத்தா வயது பழுவேட்டரையரை சில்க் ஸ்மிதா போல் நடித்து மயக்கி, பின் மணக்கிறாள். ஆனாலும் “அவங்களுக்குள்ள அன்னந்தண்ணி புழங்கல” என்று அடிக்கடி பதிவு செய்கிறார் கல்கி. சமயம் வாய்க்கும்போது கூலிப்படையை ஏவி, வேளிர்குல சிற்றரசர் மாளிகையில் வைத்து ஆதித்த கரிகாலனைப் போட்டுத் தள்ளுகிறாளாம் நந்தினி.
இது மட்டுமல்ல… பொன்னியின் செல்வன் முழுவதிலும் சோழர்களுக்கு ஒளிவட்டம் வரையும் கல்கி, பாண்டியர்களை ஒப்புக்குக் கூட ஏற்கவில்லை.
அமரபுஜங்க பாண்டியன் என்ற பாண்டிய இளவரசன், தன்னை சோழ இளவரசராகவே மரு வைத்து முகத்தை மாற்றிக்கொண்டு, சதிசெய்து சோழ அரண்மனையில் பல ஆண்டுகள் வாழ்ந்தாராம். இதை யாருமே கடைசிவரை கண்டுக்கலையாம். நந்தினி சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தாளாம்.
அதேபோல் பாண்டிய நாட்டைச் சேர்ந்த கதாபாத்திரங்களைப் பாருங்கள். கோரமாகக் காட்சியளிக்கும் சித்திரக்குள்ளன், அகோரமான மந்திரவாதி, கூலிப்படை இவர்களெல்லாம் மீண்டும் பாண்டியர் ஆட்சியை ஏற்படுத்தவும், ஆதித்தனைக் கொலை செய்யவும் சோழ நாட்டுக்கு வருகிறார்களாம்.
சரி, மறுபுறம் சோழர்கள் யார்?
அவர்கள் பரம யோக்கியர்கள். கரிகாலன் பெருமையை மீண்டும் மீண்டும் பேசுகிறார் கல்கி. பின், பார்த்திபச் சோழன் காலத்தில் சிற்றரசாக இருந்த சோழ ராஜ்யத்தை, கரிகாலன் மற்றும் பார்த்திபன் வழிவந்த விஜயாலயச் சோழன் தான் மீண்டும் பேரரசாக உருவாக்குகிறானாம். விஜயாலயன் வழி வந்தவர்களே சுந்தர சோழன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், etc, etc.
ரைட்டு.எல்லாளனை வேண்டுமென்றே கல்கி மறைத்து விட்டாரா? தெரியாது. எல்லாளன் தான் முதல்முதலாக சோழர் ஆட்சியை உருவாக்கினான் என்று சொல்லப்படுகிறது. அது சங்க காலத்தில். ஆனால் எல்லாளன் தன்னை சோழன் என்று சொல்லிக் கொண்டதாக தகவலில்லை.
பின் பல ஆண்டுகள் கழித்து இளஞ்சேட்சென்னி என்பவன் வென்னி என்ற இடத்தில் நடந்த போரில், எதிர்நின்று போரிட்ட மன்னனை வென்று ஆட்சியை ஏற்படுத்துகிறான். அவன் மகன் கரிகாலன். அவன் தந்தையின் ஆட்சியை பல போர்கள் செய்து விரிவுபடுத்துகிறான்.
கரிகாலனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் “பட்டினப்பாலை”யில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் “சோணாடு” என்று சொல்லுகிறார்.
“குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு, வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும், கழி சூழ் படப்பை கலியாணர்ப்பொழில் புறவின் பூந்தண்டலை;” (பட்டினப்பாலை 28–33)
மற்றபடி அவர் கரிகாலனின் தலைநகர் காவிரிப் பூம்பட்டிணத்தைப் பற்றியே பாடுகிறார். அந்த நெடுஞ்சோணாட்டை “சோறுடைய நாடு” என்று சொல்லிப் புரிந்து கொள்ளலாம். அல்லது “சோழநாடு” என்றும் சொல்லி புளகாங்கிதமடையலாம். அது உங்கள் உரிமை.
பின் கரிகாலனுக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து வருகிறார்கள் கிள்ளிவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய மன்னர்கள். இவர்களும் சோழர்கள் என்று விக்கிபீடியா புலவர்கள் பாடுகிறார்கள். இவர்களையும் நீங்கள் சோழர் என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், சங்ககால எல்லாளனின் வாரிசுகள் தான் இளஞ்சேட்சென்னி மற்றும் கரிகாலன் என்பதற்கோ, கரிகாலனின் வாரிசுகளே நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்பதற்கோ, இவர்களின் வாரிசுதான் 5ம் நூற்றாண்டு பார்த்திபச் சோழன் என்பதற்கோ, பார்த்திபனின் வாரிசு தான் 10ம் நூற்றாண்டு விஜயாலய சோழன் என்பதற்கோ இன்றுவரை எந்த ஆதாரமும் கிடையாது.
மன்னர் கால ஆட்சி என்பது போரை வைத்தே முடிவு செய்யப்பட்டது. போரில் தோற்ற நாட்டில் கொலை செய்யலாம், கொள்ளை அடிக்கலாம். நாட்டையே தரைமட்டமாக்கலாம். பெண்களை அடிமையாக்கலாம். இப்படிதான் அன்று வாழ்ந்தார்கள். இதில் சோழர்கள் நல்லவர்கள், பாண்டியர்கள் கெட்டவர்கள் என்பதெல்லாம் இல்லை. தோற்ற மன்னரின் வீட்டிலுள்ளோருடன் மண உறவைக் கூட ஏற்படுத்தினார்கள் வெற்றிபெற்ற மன்னர்கள். அதையும் மீறி மீண்டும் போர் நடக்கும். ஆட்சி கைமாறும். அதிகம் பாதிக்கப்பட்டோர் அடித்தட்டு மக்கள்.
அரச குடும்பத்தில் சகோதரச் சண்டை சகஜமாக நடக்கும். பாண்டியர்களின் சகோதரச் சண்டை தான் மாலிக் காபூரை மதுரைக்கு வரவழைத்தது.ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தான் என்பதற்கு எந்த சரித்திரச் சான்றும் இல்லை. இதில் ஏன் நந்தினியை வலிந்து திணிக்கவேண்டும்?
தான் பட்டத்திற்கு வருவதற்காக ஆதித்தனை, தம்பி அருள்மொழி தான் சதிசெய்து கொன்றான் என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால் எதற்கும் ஆதாரமில்லை.
அடுத்ததாக மேற்படி அமரபுஜங்க பாண்டியனை, ராஜராஜசோழன் காந்தளுர்ச் சாலைப் போரில் கலமறுத்தார். எப்போ அறுத்தார்?
கிபி 930–945 காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த அமரபுஜங்க பாண்டியனை, அதாவது முகத்தில் மரு வைத்து மதுராந்தகனாக சோழர் அரண்மனையில் இருந்த (செத்து 40 ஆண்டுகள் கழித்து வரப்போகும்) அமரபுஜங்கனை, கிபி 985ல் மன்னனாகப் போகும் ராஜராஜன் (40 ஆண்டுகள் முன்னே சென்று) கலமறுத்தார்.
சரி… போகட்டும்.
சோழர் உள்ளிட்ட அனைத்து மன்னர்களும் கட்டிய கோயில்கள் தெரியும். கட்டிய கல்விச்சாலைகள் எத்தனை என்ற கணக்கு உண்டா? கிடையாது.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், விவசாயிகளின் வரிகொடா இயக்கம் பேரெழுச்சியாய் மாறி இளவரசனைக் கொலை செய்யும் வரை போனது. இதுகுறித்த ஆய்வுகள் இல்லை.
பின் மூன்றாம் ராசேந்திரன் காலத்தில் படையெடுத்து வந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன், சோழப் பேரரசைத் தரைமட்டமாக்கி, சோழ சிற்றரசாக மாற்றித் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான். இன்றுவரை சடையவர்மன் சுந்தரபாண்டியனின் வரலாறு அறியப்படாமலே இருட்டில் இருக்கிறது.
இப்படியாக மன்னர்களுக்கு வரையப்படும் ஒளிவட்டத்தின் பின், பொய்யும் புரட்டுகளும் கலந்திருக்கிறது என்பதே இக்கட்டுரையின் செய்தி.
பொன்னியின் செல்வனைத் தாண்டி சரித்திரத்தை வாசித்தறிவது அவசியம்.
மெய்ப்பொருள் காண்பதறிவு.
Write a comment ...